நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கு 22 ஆம் தேதி தூக்கு

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி ஐகோர்ட் உத்தரவு.


டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

 

நிர்பயா வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் மற்றும் மைனர் குற்றவாளியோடு 6 பேர் கைது செய்யயப்பட்டு குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இதில் பிரதான குற்றவாளியான ராம் சிங் சிறையிலேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் மைனர் குற்றவாளி சிறார் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டு விடுதலையானார்.

 




2012ஆம் ஆண்டில் தேசத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனங்களையும், கோரிக்கைகளையும் விடுத்து வந்தனர். உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இந்த வருடமே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இன்று நீதிமன்றம் அறிவித்தபடி வரும் 22 ஆம் தேதி குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.